ஒரு பாமர ரசிகையின் MSS குறித்த மலரும் நினைவுகள்
(மேலே உள்ள படத்தில், இடமிருந்து வலம், டாக்டர் நாராயணண் சக்ரவர்த்தி, திரு.சதாசிவம், MSS & என் சித்தி)
என் சித்தி திருமதி வேதவல்லி ரகுராமன், MS அவர்களின் தீவிர ரசிகை என்பது எனக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால், கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் MS அவர்களுடன் அவர் நட்பு முறையில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்பதை சமீபத்திய இரயில் பயணத்தின் போது தான் தெரிந்து கொண்டேன்! அந்த உரையாடலில், MS அவர்களைப் பற்றி சித்தி கூறிய பல விஷயங்களை கேட்டபோது தான், MS என்ற மகாமனுஷியை நான் நேரில் ஒரு முறை சந்தித்து பேச முடியாமல் போனது பெருங்குறையாகத் தோன்றியது.
சித்தி, தன் சிறுவயதில், திருவல்லிக்கேணியில், M.S.காந்திமதி என்பவரிடம் கர்னாடக இசை பயின்று வந்தார். MS-இன் குரலைக் கேட்டதிலிருந்து அவரை சந்திக்க, சிறுமியாக இருந்த சித்திக்கு மிகுந்த ஆசை! 1957-இல், சித்தியின் 15-ஆவது வயதில், பார்த்தசாரதி சுவாமி சபாவில் நடந்த ஒரு MS-இன் கச்சேரியின் முடிவில், கஷ்டப்பட்டு MS-ஐ சந்தித்து, 'உங்களுடன் பேச வேண்டும், உங்கள் இல்லத்துக்கு வரலாமா?' என்றவுடன், தன்னிடம் அவ்வாறு வினவிய சிறுமியிடம் MS, மலர்ந்த முகத்துடன், 'ஒரு ஃபோன் பண்ணிவிட்டு பேஷாக வாருங்கள், பேசுவோம்' என்றார்! அந்த தன்னடக்கம் தான் MS பல சிகரங்களைத் தொட முக்கியக் காரணம்!
இரு நாட்களுக்குப் பின், தொலைபேசியில் சதாசிவம் அவர்களிடம் அனுமதி பெற்று, துணைக்கு சகோதரியை அழைத்துக் கொண்டு, நுங்கம்பாக்கத்தில் இருந்த MS அவர்களின் வீட்டுக்கு சித்தி சென்றார். இரு சிறுமியரும் கூர்க்காவுடன் மன்றாடி, வீட்டுக்குள் சென்று MS-ஐ சந்தித்துப் பேசினர். பல காலம் அறிந்தவர்களுடன் உரையாடுவது போல் MS அச்சிறுமியருடன் வெகுநேரம் பேசினார், சில பாடல்களும் பாடிக் காட்டினார் என்றும், அந்தி சாய்ந்த வேளையில் அப்பெண்கள் வீடு திரும்ப வேண்டியதை எண்ணி, தனது காரில் MS அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தார் என்றும் என் சித்தி கூறியபோது, MS இசையில் மட்டுமல்ல, அன்பிலும், பண்பிலும் மிக உயர்ந்தவர் என்பது புலப்பட்டது!
அச்சந்திப்புக்குப் பின், MS வாழ்ந்த வரை, பல முறை அவரைப் பார்க்க சித்தி சென்றிருக்கிறார். பல கச்சேரிகளின் முடிவில், முண்டியடித்து, MS-ஐ பார்த்து, ஒரு சில நிமிடங்களாவது பேசுவதை சித்தி வழக்கமாக வைத்திருந்தார். பல முறை, MS-இன் அறிமுகம் வேண்டிய உறவினர்களையும், நண்பர்களையும், MS-இடம் அழைத்துச் சென்று, சித்தி அவர்களை மகிழ்ச்சியுற செய்திருக்கிறார்! சித்தியைப் பார்த்த ஒவ்வொரு முறையும், MS, 'எல்லோரும் சௌக்யம் தானே, என்ன சாப்பிடுகிறீர்கள்?' என்று அன்பாக விசாரித்த பின் தான், மற்றதைப் பேசுவார். MS வீட்டுக்குச் செல்பவர்களுக்கு, தவறாமல் கிடைக்கும் ஒரு அயிட்டம் சுக்கு காபி தான்! என் சித்தியிடம் என்றில்லை, அவரை சந்திக்கச் செல்லும் ஒவ்வொருவரிடமும் MS, தன்மையாக நடந்து கொள்ளும் பாங்கும், இனிமையாக பழகும் விதமும், சந்திக்கச் சென்றவரை கட்டிப் போட்டு விடும் என சித்தி கூறினார். அதாவது, தான் ஒரு சாதனையாளருடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை சந்திக்க வந்த நபர் உணரா வண்ணம் MS நடந்து கொள்வாராம். எந்த வித சூழ்நிலையிலும், MS இறுதி வரை அதிலிருந்து தவறியதில்லை!
சங்கீதத்தில் பல சந்தேகங்களை, எத்தனை முறை கேட்டாலும் மிகுந்த பொறுமையுடன், சலிக்காமல் MS அவற்றை நிவர்த்தி செய்வார். என் சித்தி, பரிவு, உபசாரம், எளிமை, பணிவு, பரந்த மனப்பான்மை, உதவும் மனப்பாங்கு போன்ற பல நல்ல குணங்களை MS-ஐ பார்த்து தான் வளர்த்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது! MS-ஐ சந்தித்த ஒவ்வொரு முறையும் அவரை பாதம் தொட்டு வணங்குவதையும், பின்னர் அச்சந்திப்பைப் பற்றிய தன் எண்ணங்களை ஒரு கடிதமாக எழுதி MS-க்கு அனுப்புவதையும் சித்தி வாடிக்கையாக செய்து வந்திருக்கிறார்! சித்தியின் கையெழுத்து அழகாக இருப்பதாக (நிஜமாகவே!) MS பாராட்டியிருக்கிறார். மற்றவரிடம் உள்ள சின்னச்சின்ன நல்ல விடயங்களைக் கூட கவனித்து பாராட்டும் இயல்பு அந்த இசை மாமேதையிடம் இருந்தது!
மிகுந்த மனஉளைச்சலிலும், கவலையிலும் இருந்த சமயங்களில், MS அவர்களை சந்தித்துப் பேசிவிட்டு வந்தால், ஒருவித தெம்பும், அமைதியும் ஏற்பட்டதாக சித்தி கூறினார். தன் இசையால் மட்டுமல்ல, பேச்சாலும் பிறரை உற்சாகப்படுத்த MS தவறியதில்லை போலும்! சித்திக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறிந்த MS தனது மருத்துவரை தொலைபேசியில் அழைத்து, தனது ரசிகை ஒருவரை அவரிடம் அனுப்புவதாகவும், ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். உண்மையான அக்கறையும் மனிதநேயமும் கொண்டவர் அந்த இசைக்குயில்!
எங்கள் வீட்டு திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற பல நிகழ்வுகளுக்கு MS வருகை தந்திருக்கிறார் என சித்தி கூறக் கேட்டேன். பாடுவதற்காக வராவிட்டாலும், யாராவது அவரை பாடுமாறு கேட்டுக் கொண்டால், கேட்பவர்கள் திருப்தி அடையும் வரை, அவர்கள் விரும்பிக் கேட்கும் பாடல்களைப் MS பாடுவாராம். முப்பது வருடங்களுக்கு முன் நடந்த என் மாமா ஸ்ரீதரனின் திருமணத்திற்கு MS வந்திருந்ததும், நாற்காலியைப் புறக்கணித்து சாதாரணமாக தரையில் அமர்ந்து பலருடன் அளவளாவியதும், என் நினைவிலும் பசுமையாக உள்ளது. IIT, சென்னையில் படித்த என் சித்தியின் மகன் Dr.நாராயணன் சக்ரவர்த்தி, அமெரிக்கா சென்று டாக்டர் பட்டம் பெற்றபின், தாயகம் திரும்பி, அதே கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்த விடயத்தைக் கேள்விப்பட்டவுடன், MS அவனை அழைத்து, 'உன்னைப் போன்றவர் வெளிநாட்டில் படித்தாலும், திரும்ப வந்து இங்கேயே வேலை செய்வது, நாட்டுக்கு செய்யும் மிக நல்ல காரியம், ரொம்ப சந்தோஷம்' என்று கூறி ஆசிர்வதித்தார்!
1997-இல் சதாசிவம் அவர்கள் காலமான பின்னர், MS-ஐ சந்தித்த என் சித்தி, பூவும் நெற்றி நிறைய குங்குமமும் இல்லாத MS-ஐ பார்த்தபோது, மிகுந்த சங்கடமும், சோகமும் மனதை வதைத்ததாகக் கூறினார். அந்நிகழ்வுக்குப் பின்னர், MS மேடைக் கச்சேரிகளில் பாடுவதை முழுவதும் தவிர்த்து விட்டாராம். இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு, MS-க்கு காய்ச்சல் வந்து அவரால் நடக்க இயலாமல் போனது. பெரும்பாலும் கட்டிலில் படுத்திருந்த அச்சமயத்திலும், அவரை சந்திக்கச் சென்ற என் சித்தியைக் கண்டவுடன் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்து அன்பாகப் பேசிக் கொண்டிருந்ததோடு, அவருக்காக வாங்கிச் சென்ற ஆப்பிள் பழங்களுக்காக என் சித்திக்கு நன்றியும் தெரிவித்தார்! சித்தியுடனான MS குறித்த, இரயில் பிரயாண உரையாடலின் முடிவில், MS ஒரு இசை சகாப்தமாக விளங்காமல் இருந்திருந்தாலும், அவரைப் போன்ற நல்ல உள்ளங்களை இக்காலத்தில் பார்ப்பது அரிதான ஒன்று எனத் தோன்றியது!
என்றென்றும் அன்புடன்,
பாலா
4 மறுமொழிகள்:
போனதடவை இந்த பதிவை பார்த்தபோதே எழுத நினைத்தேன். கமெண்ட் பக்கம் போகமறுத்தது. அதனால் இப்போது.
உங்கள் சித்தி கர்நாடக பாடகி வேதவல்லியா? (கொஞ்சம் பிரபலமான) அப்படியெனில் என்னவென்று அடுத்தமுறை சொல்கிறேன்.
Dear ரோசா,
//உங்கள் சித்தி கர்நாடக பாடகி வேதவல்லியா? (கொஞ்சம் பிரபலமான) //
என் சித்தி நீங்கள் நினைக்கும் "பிரபல" வேதவல்லி அல்லர்! ஆனால், MS அவர்களின் நெருங்கிய நட்பு கிடைக்கப் பெற்றவர். ஓரளவு நன்றாக பாடவும் செய்வார். அவ்வளவே! அதனால் தான் பதிவின் தலைப்பிலேயே "ஒரு பாமர ரசிகையின் MSS குறித்த மலரும் நினைவுகள்" என்று குறிப்பிட்டேன் :-) உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்றறிந்தேன். கர்னாடக சங்கீதமும் கேட்பீர்களா?
//அப்படியெனில் என்னவென்று அடுத்தமுறை சொல்கிறேன்.//
சொல்ல வந்ததை (என் சித்தி பிரபலம் இல்லாவிட்டாலும்) சொல்லலாமே :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
பதிலுக்கு நன்றி. நான் சொல்ல வந்த விஷயம் இப்போது தேவையில்லை. ஆயினும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். சமீபத்தில் 'பிரபல' வேதவல்லியின் மகளை பிரான்ஸில் சந்தித்தேன். அவர் தொடர்பாய் உக்களிடம் பேசவே கேட்டேன். மற்றபடி விஷயம் எதுவும் இல்லை. நன்றி.
கர்நாடக சங்கீதத்தில் மிக பெரிய ஆர்வம் இல்லையெனினும் கேட்பதுண்டு! சமீபகாலமாய் அது அதிகரித்திருக்க காரணம் என் துணைவி, அவருக்கு வாசிக்க தெரிந்த வயலின் etc விசாரிப்புக்கு நன்றி.
Post a Comment